இந்தியாவுக்கு 10 கோடி தடுப்பூசி - ரஷியா விற்பனை செய்ய சம்மதம்
ரஷியா 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
மாஸ்கோ,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் அறிவித்தார்.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-வி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, அடினோ வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு, ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும், இந்தியாவின் ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டுள்ள பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றதும், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுக்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வினியோகம் செய்யும்.
இந்த தடுப்பூசியின் வினியோகம், அதன் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் பதிவை பெற்றதும் நடப்பு ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இதையொட்டி ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறியதாவது:- இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுடன் கூட்டு சேருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷியாவில் நன்கு நிறுவப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய இருப்பை கொண்டுள்ளது. இது இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எங்களது தடுப்பூசி, இந்தியாவுக்கு பாதுகாப்பான மற்றும் விஞ்ஞான ரீதியாக சரிபார்க்கப்பட்ட தேர்வாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் இணை தலைவர் ஜி.வி.பிரசாத் கூறும்போது, “ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தடுப்பூசியின் முதல் இரு கட்ட சோதனைகள் நல்ல முடிவை காட்டி உள்ளன. நாங்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவோம். இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் இந்த தடுப்பூசி நம்பகமான தேர்வு ஆக அமையும்” என கூறினார்.
Related Tags :
Next Story