கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீஸ் தடியடி ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு


கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீஸ் தடியடி ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 4:30 AM IST (Updated: 18 Sept 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீஸ் தடியடி ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு

திருவனந்தபுரம்,

மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி கெ.டி.ஜலீலிடம் 2 முறை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்றும் நீடித்தது. பாலக்காட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பல்ராம் தலைமையில் இளைஞர் காங்கிரசார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறி விட்டது.

நிலைமை விபரீதமாவதை அறிந்த போலீசார், அவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில், போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. பல்ராமை போலீசார் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரால் தாக்கப்பட்ட அவர் ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து ஓடினார்.

பின்னர் காங்கிரசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த மோதலில் ஏராளமான காங்கிரசாரும், 5 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

அதே போல், கோட்டயத்தில் மந்திரி ஜலீலுக்கு எதிராக பா.ஜ.க. யுவ மோர்ச்சா அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது, தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தடுத்தனர். ஆனால் பா.ஜ.க.வினர் தடுப்பு வேலிகளை தாண்டி குதிக்க முயன்றனர்.

இதனால் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் அவர்கள் கலையவில்லை. பிறகு தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். மாநிலம் முழுவதும் நேற்று எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரால் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Next Story