டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் தளர்வுகளையும் அறிவித்திருந்தது.
இதனால், மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. எனினும், அவர்களின் வருங்கால நலனுக்காக ஆன்லைன் வழி கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கியது.
டெல்லியில் அதிக அளவு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அரசு கூறி வருகிறது. எனினும், டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த சூழலில், டெல்லி மாநில கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லியில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை மாணவர்களுக்கான பள்ளி கூடங்களும் வருகிற அக்டோபர் 5ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகள், கல்வி போதனை மற்றும் கற்றல் நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் இதன் வழியே அறிவிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story