புதிய கல்வி கொள்கை ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு


புதிய கல்வி கொள்கை ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
x
தினத்தந்தி 20 Sept 2020 4:15 AM IST (Updated: 20 Sept 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கை ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

புதுடெல்லி,

‘உயர் கல்வியில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துதல்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. மாணவர்களின் புத்திகூர்மையை மேம்படுத்துவதும், ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிப்பதும் புதிய கல்வி கொள்கையின் அடிப்படை அம்சங்கள் ஆகும்.

கல்வியில் சர்வதேச அளவில் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு உயர்கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. இந்த நிறுவனங்களில் வழங்கப்படும் தரமான கல்வியை அளவுகோலாக கொண்டு மற்ற கல்வி நிறுவனங்களும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

முன்னொரு காலத்தில் கல்வித்துறையில் இந்தியா உலகில் முக்கிய மையமாக விளங்கியது. தேசிய கல்வி கொள்கையை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் அந்த பெருமையை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன். 21-ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தடையற்ற கருத்து பரிமாற்றங்களும், கலந்துரையாடல்களும் நடைபெறுவது அவசியம் ஆகும்.

மனப்பாடம், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மாணவர்கள் தங்களுக்கு எந்த துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளதோ, அதன் அடிப்படையில் தேவையான பாடப்பிரிவை எடுத்து படிக்க இந்த கல்வி திட்டம் வழிவகை செய்கிறது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் போது மாணவர்கள் பெற்ற அவர்களுடைய கல்வித்திறன் தொடர்பான திறன்கள் பற்றிய விவரங்கள் மின்னணு வடிவில் சேமிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு பட்டம் வழங்க இந்த கல்விக் கொள்ளை வகை செய்யும். பி.எட். படிப்பு, தொழிற்கல்வி, தொலைதூர கல்வி ஆகிவற்றை கண்காணிப்பது அவசியம் என்பதால் அதற்கும் இதில் வகை செய்யப்பட்டு உள்ளது.

புதிய கல்வி கொள்கையில் 2035-ம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்ட ஆன்லைன் கல்வி முறையையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளின் சேர்க்கையையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் பேசுகையில், புதிய கல்வி கொள்கையின் மூலம் கல்வியின் தரம் மேம்படும் என்றும், மேலும் நாட்டில் கல்விமுறையை பரவலாக்கவும், வலுப்படுத்தவும் உதவும் என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து புதிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story