வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு


வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Sep 2020 5:35 AM GMT (Updated: 2020-09-20T11:05:31+05:30)

வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. 

வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.  இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். 

இந்த மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி    பார்தாப் சிங் பஜ்வா, வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயி மீதான மரண சாசனம் . பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலத்தை அபகரிக்க, இந்த மசோதாக்கள் வழிவகுக்கும்” என்றார். 

வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், “ வேளாண் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா தேவையில்லாதது.  வேளாண் மசோதா விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பு. "தற்போது இந்த மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை" என்றார். 


Next Story