நானும் ஒரு விவசாயியே; குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்: ராணுவ மந்திரி பேட்டி
நானும் ஒரு விவசாயி என்றும் நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேலவையில் இன்று 2 வேளாண் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
அவையில் கடும் அமளிக்கு இடையே விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை துணை தலைவருக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்து உள்ளனர்.
இதுபற்றி மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அளித்துள்ள பேட்டியில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிகழ்வு கவலை அளிக்கிறது. துரதிர்ஷ்டவசம் ஆனது. வெட்கப்பட வேண்டியது. அவையில், விவாதங்களை நடத்துவது ஆளுங்கட்சியின் பொறுப்பு. இதேபோன்று, அவையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை.
எனக்கு தெரிந்து வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை என கூறினார். வதந்திகளின் அடிப்படையில் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன.
நானும் கூட ஒரு விவசாயி. நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேளாண் பொருட்கள் சந்தை கமிட்டி திட்டங்கள் ஆகியவை தொடரும் என்று விவசாயிகளுக்கு உறுதி கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story