மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டதால் பரபரப்பு


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 12:17 AM GMT (Updated: 21 Sep 2020 12:17 AM GMT)

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, மாநிலங்களவையில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேறின. சபை விதிமுறை புத்தகங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய3 வேளாண் மசோதாக் களை மத்திய அரசுமக்களவையில் தாக்கல் செய்தது

இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று கூறி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

வேளாண்மை துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு மசோதாக்களும் விவசாயிகளின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்கள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கான சுதந்திரத்தை இந்த மசோதாக்கள் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இரு மசோதாக்களையும் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), கே.கே.ராகேஷ் (இந்திய கம்யூனிஸ்டு), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மசோதாக்களின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாக்களின் பாதகமான அம்சங்களை விளக்கி கூறி, அவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதாப் சிங் பஜ்வா (காங்கிரஸ்), சரியாக யோசிக்காமல் பொருத்தமற்ற சமயத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாக்களை தங்கள் கட்சி முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், விவசாயிகளுக்கான மரண தண்டனை உத்தரவு போல் அமைந்துள்ள இந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் கூறினார்.

உறுப்பினர் கே.கே.ராகேஷ் பேசுகையில், இந்த மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், மசோதாக்களை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார். இந்த மசோதாக்கள் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்றும், மாநில அரசின் பட்டியலில் இருக்கும் வேளாண்மையை மத்திய அரசு பறித்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தி.மு.க. உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பேசுகையில், இரு மசோதாக்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மசோதாக்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கூறினார்கள்.

வேளாண் மசோதாக்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், அந்த கட்சியின் உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மசோதாக்களுக்கு எதிராக பேசினார்.

மசோதாக்களுக்கு ஆதரவாக பேசிய பாரதீய ஜனதா உறுப்பினர் புபேந்தர் யாதவ், இந்த பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாகவும், அவர்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். வேளாண் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற போதும், கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் உயராமல் இருந்தது ஏன்? என்றும் அப்போது அவர் எதிர்க்கட்சியினருக்கு கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக பேசினார்கள்.

உறுப்பினர்கள் பேசி முடித்ததும் விவாதத்துக்கு பதில் அளித்து மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசுகையில் கூறியதாவது:-

மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதுமே, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் இந்த மசோதாக்களை கொண்டு வர முடிவு செய்தார். இந்த மசோதாக்களால் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை ரத்து செய்யப்படாது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. மோடி அரசுதான் அதை நிறைவேற்றி இருக்கிறது.

அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது சபையை நடத்திக்கொண்டிருந்த துணைத்தலைவர் ஹரிவன்ஷ் குறுக்கிட்டு, பிற்பகல் 1 மணிக்குள் மசோதாவை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டினார். அதற்கு நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, மசோதாக்கள் நிறைவேற்றி முடிக்கப்படும் வரை சபை நீட்டிக்கப்படும் என்றார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் குலாம்நபி ஆசாத், ஆளும் கட்சியினர் மட்டுமே இதை முடிவு செய்ய முடியாது என்று கூறினார்.

அப்போது தொடர்ந்து பேச மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத்தலைவரின் இருக்கை அருகே சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், துணைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டதோடு, சபை விதிமுறை புத்தகங்களை கிழித்து எறிந்தார். துணைத்தலைவரின் மைக்கும் சேதப்படுத்தப்பட்டது.

நிலைமை மிகவும் மோசமானதால் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் 15 நிமிடங்கள் சபையை ஒத்திவைத்தார்.

அதன்பிறகு பிற்பகல் 1.41 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மசோதாக்களை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியதோடு, டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்களின் கோரிக்கையை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஏற்க மறுத்துவிட்டார். இருக்கைகளில் சென்று அமருமாறு ஹரிவன்ஷ் கேட்டுக்கொண்டும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து, பலத்த அமளிக்கு இடையே இரு மசோதாக்களும் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டன. அதன்படி உறுப்பினர்களின் குரல் ஓட்டு மூலம் மசோதாக்கள் நிறைவேறியதாக துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.

மசோதாக்களில் சில திருத்தங்களை செய்ய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மாநிலங்களவை கூட்டத்தை இன்றைய தினத்துக்கு (திங்கட்கிழமை) துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் பிற்பகலில் மக்களவை கூடியது. மாநிலங்களவையில் ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களுக்கு மக்களவை உறுப்பினர் கள் வந்தனர். ஆனால் அங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களால் சபைக்குள் நுழைய முடியவில்லை.

இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை கூட்டத்தை 1 மணி நேரம் ஒத்திவைத்தார்.

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேறிவிட்டதால், இனி அவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் இரு மசோதாக்களும் சட்ட வடிவம் பெற்று அமலுக்கு வரும்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு மசோதாவான அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. அந்த மசோதாவை மற்றொரு நாளில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Next Story