எம்.எஸ்.பி.யில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன்; பிரதமர் மோடி பேச்சு
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) திட்டத்தில் கோதுமை கொள்முதலில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன் கிடைத்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு இன்று காணொலி காட்சி வழியே அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல் மந்திரி நிதீஷ்குமார் கலந்து கொண்டார்.
இதன்பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் 2 வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளை நான் பாராட்டுகிறேன். வேளாண் பிரிவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தற்பொழுது தேவையானது. விவசாயிகளுக்காக எங்களுடைய அரசு இந்த சீர்திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது.
வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை முன்பிருந்தது போல் நிச்சயம் தொடரும் என விவசாயிகளுக்கு உறுதி அளிக்கிறேன்.
இந்த மசோதாக்கள், வேளாண் விளைபொருட்களை சுதந்திரமுடன் எங்கேயும் விற்பனை செய்து கொள்ளும் அதிகாரத்தினை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன. இதேபோன்று, இந்த மசோதாக்கள் வேளாண் கடைகளுக்கு எதிரானது அல்ல என்றும் தெளிவுப்படுத்தி கொள்ள நான் விரும்புகிறேன்.
கொரோனா பாதிப்பு காலத்தில், ரபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.1.13 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதுமை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. சாதனை அளவான இந்த தொகையானது கடந்த ஆண்டை விட 30% அதிகம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story