இந்தியா நடத்திய அதிநவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு


இந்தியா நடத்திய அதிநவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு
x
தினத்தந்தி 23 Sep 2020 10:30 PM GMT (Updated: 2020-09-24T01:31:02+05:30)

இந்தியா நடத்திய லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா நடத்திய லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதற்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

டி.ஆர்.டி.ஓ.வின் (ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) அங்கமாக, மராட்டிய மாநிலம், புனேயில் அமைந்துள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அங்குள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து லேசர் வழிகாட்டும் டாங்கி தடுப்பு ஏவுகணையை (ஏ.டி.ஜி.எம்.) உள்நாட்டில் தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணை லேசர் வழிகாட்ட 4 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரியின் டாங்கியையும், ராணுவ கவச வாகனங்களையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும்.

இந்த ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மூன்றாம் தலைமுறை டாங்கியான அர்ஜூனில் பொருத்தி, ஏவி சோதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மராட்டிய மாநிலம், அகமதுநகர் கவச மையம் மற்றும் பள்ளியின் கே.கே. ரேஞ்சஸில் நிறுத்தப்பட்டிருந்த அர்ஜூன் டாங்கியில் லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை பொருத்தி, ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் குழுவை பாராட்டி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியா வெற்றிகரமாக லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்தி முடித்திருப்பதற்கு டி.ஆர்.டி.ஓ.வுக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் இறக்குமதி சார்பு நிலையை குறைக்கும் வகையில் உறுதியுடன் செயல்படுகிற ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் குழுவால் இந்தியா பெருமை கொள்கிறது.

இவ்வாறு அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுடனும் எல்லையில் பிரச்சினைகளையும், மோதல்களையும் சந்தித்து வருகிற நிலையில் இந்த லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையானது இந்திய ராணுவத்தின் தாக்குதல் பலத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story