பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி போஸ்டர்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு


பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி போஸ்டர்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு
x
தினத்தந்தி 25 Sep 2020 2:08 AM GMT (Updated: 2020-09-25T07:38:40+05:30)

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளின் போஸ்டர்களை சாலை சந்திப்புகளில் வைக்கும்படி போலீசாருக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, ஈவ் டீசிங் செயல்களில் ஈடுபடுவோர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் ஆகியோரை அவமானப்படுத்தும் வகையில், அவர்களது போஸ்டர்களை உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபல சாலை சந்திப்புகளில் வைக்கும்படி முதல் மந்திரி யோகி உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், ஆபரேசன் துராசாரி என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மகளிர் போலீசார், இதுபோன்ற சமூக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.  இதேபோன்று அவர்களுக்கு பின்புலத்தில் பக்கபலம் ஆக செயல்படும் நபர்களையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடக்கி, ஒடுக்க ஆன்டி ரோமியோ போலீஸ் படையை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க யோகி உத்தரவிட்டார்.  எனினும், உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்த நிலையில், முதல் மந்திரி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

Next Story