வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட திரண்டதால் டெல்லி எல்லையில் போலீஸ் குவிப்பு


வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட திரண்டதால் டெல்லி எல்லையில் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 8:33 PM GMT (Updated: 2020-09-26T02:03:25+05:30)

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட டெல்லி எல்லையில் விவசாயிகள் திரண்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சில மாநிலங்களில் விவசாய அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, நேற்று டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட நொய்டாவில் சுமார் 200 விவசாயிகள் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்கள்டெல்லிக்குள் நுழைந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக டெல்லி போலீசார் துரிதமாக செயல்பட்டனர்.

உடனே, டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் சில்லா பகுதியில் டெல்லி போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.

விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முயன்றபோது, அவர்களை கவுதம் புத்தாநகர் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுபோல், டெல்லி-அரியானா எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஏனென்றால், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், டெல்லிக்குள் நுழைய முயன்று வருகிறார்கள்.

அதை தடுப்பதற்காக, டெல்லி-அரியானா எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

நாடு தழுவிய போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால், டெல்லியை சுற்றி உள்ள அனைத்து எல்லைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story