இந்தியாவின் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது மேலும் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி


இந்தியாவின் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது மேலும் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 25 Sep 2020 11:30 PM GMT (Updated: 25 Sep 2020 9:27 PM GMT)

இந்தியாவில் மேலும் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் தினசரி நடைபெறும் பரிசோதனை எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி உள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் 2-ம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் தொற்றை ஒழிப்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக ‘பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை’ என்ற கொள்கையை தாரக மந்திரமாக பின்பற்றி வருகிறது.

இதில் முக்கியமாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்தவரிசையில் இந்த பரிசோதனையில் ஈடுபட்டு வரும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை நேற்று வரை 1,818 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 734 பரிசோதனைக்கூடங்கள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும். மொத்த பரிசோதனைக்கூடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 923 ஆகும்.

நாடு முழுவதும் உள்ள பரிசோதனைக் கூடங்களில் இரவு-பகலாக கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதனால் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முதல் முறையாக 14 லட்சத்து 92 ஆயிரத்து 409 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 6.89 கோடியாக அதிகரித்து உள்ளது. இதில் கடைசி 1 கோடி பரிசோதனைகள் வெறும் 9 நாட்களில் நடந்தவை ஆகும்.

இவ்வாறு வேகமெடுத்து வரும் பரிசோதனை நடவடிக்கைகள் மூலம் 10 லட்சம் பேருக்கு 49 ஆயிரத்து 948 பரிசோதனைகள் என்ற அளவில் அதிகரித்து இருக்கிறது. இதில் தொற்றின் சாத்திய விகிதம் 8.44 ஆக இருக்கிறது. அதேநேரம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியான 49,948 என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86 ஆயிரத்து 52 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 58 லட்சத்து 18 ஆயிரத்து 571 ஆக உயர்ந்திருக்கிறது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 1,141 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 290 ஆகியிருக்கிறது. நாட்டின் சாவு விகிதம் 1.59 என்ற நிலையிலேயே நீடிக்கிறது.

அதேநேரம் மேற்படி 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 177 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருக்கின்றனர். இதனால் மொத்தம் மீண்டோர் எண்ணிக்கை 47 லட்சத்து 56 ஆயிரத்து 165 ஆகி விட்டது. இது 81.74 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9 லட்சத்து 70 ஆயிரத்து 116 ஆகும். இது 16.67 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் அதிக பாதிப்பு, அதிக மரணம், அதிக குணமடைந்தோர் எண்ணிக்கை, அதிக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை என அனைத்திலும் மராட்டிய மாநிலமே முதலிடத்தில் இருக்கிறது.

உலக அளவில் பாதிப்பில் இந்தியா 2-ம் இடத்திலும், குணமடைந்தோர் எண்ணிக்கையில் முதலிடத்திலும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story