கற்பழிக்கப்பட்ட பெண் பலியான விவகாரம்; தடையை மீறி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது


கற்பழிக்கப்பட்ட பெண் பலியான விவகாரம்; தடையை மீறி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது
x
தினத்தந்தி 2 Oct 2020 5:45 AM IST (Updated: 2 Oct 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிக்கப்பட்ட பெண் பலியான விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தியும், பிரியங்காவும் உத்தர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நொய்டா,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி அங்குள்ள வயல்வெளியில் புல் அறுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அவரை உயர் சாதியை சேர்ந்த 4 இளைஞர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று, கூட்டாக கற்பழித்தனர். அது மட்டுமின்றி, அந்த பெண்ணை பயங்கரமாக தாக்கிய அவர்கள், நடந்த சம்பவத்தை வெளியில் கூறாமல் இருக்க அவரது நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

கொடூரமான இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளம்பெண் முதலில் உள்ளூர் மருத்துவமனையிலும், பின்னர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில் இளம்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கியதுடன், பல இடங்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கடந்த 29-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை போல நாடு முழுவதும் உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தை கண்டித்து உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஒப்புதல் இன்றி நேற்று முன்தினம் அதிகாலையில் போலீசாரே அவசரம் அவசரமாக தகனம் செய்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருப்பதாக அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் கொந்தளிப்பை பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர்.

இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தால் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதற்காக மாநில உள்துறை செயலாளர் பகவான் ஸ்வரூப் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். இந்த குழுவினர் வருகிற 6-ந்தேதிக்குள் அறிக்கை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். இந்த குழுவினர் இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் நேற்று முன்தினமே விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஹத்ராஸ் தலித் இளம்பெண் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், மொராதாபாத் நகரை தூய்மைப்படுத்த மறுத்தனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்போல மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதாக கூறி எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

எனவே இதை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இளம்பெண்ணின் கிராமத்துக்குள் அரசியல்வாதிகளும், ஊடகத்தினரும் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளனர். ஹத்ராஸ் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. ஹத்ராஸ் நோக்கி வரும் அரசியல்வாதிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

அந்தவகையில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசார் டெல்லியில் இருந்து ஹத்ராஸ் நோக்கி நேற்று புறப்பட்டனர்.

நொய்டா அருகே உத்தரபிரதேச எல்லையில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்களில் இருந்து இறங்கிய ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசார், தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி கால்நடையாக நடந்தே செல்ல தொடங்கினர். அவர்களுடன் ஏராளமான கட்சி தொண்டர்களும் சென்றனர்.

ஆனால் சிறிது தூரம் சென்றதும் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோரை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட களேபரத்தில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தூக்கி விட்டனர்.

பின்னர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

முன்னதாக தன்னை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், ‘ஹத்ராஸ் நோக்கி தனியே நடந்து செல்ல முயன்ற என்னை, எந்த சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தினீர்கள்?’ என்று ராகுல் காந்தி வினவினார்.

அதற்கு போலீசார், தொற்றுநோய்க்கு எதிராக அரசு பிறப்பித்து உள்ள இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188-ஐ மீறியதாக தெரிவித்தனர்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த தள்ளுமுள்ளு மற்றும் ராகுல் காந்தி கீழே விழுந்தது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘விடுதலை போராட்டத்தின்போது ஆங்கிலேயர்கள் தன்னை அடித்த ஒவ்வொரு அடியும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கான சவப்பெட்டியின் கடைசி ஆணி அடிக்கப்படுவதை உறுதி செய்யும் என லாலா லஜபதி ராய் கூறியிருந்தார். அதைப்போல ராகுல் மற்றும் பிரியங்காவின் வாகன அணிவகுப்பில் விழுந்த ஒவ்வொரு அடியும், யோகி அரசுக்கான சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணிகள் ஆகும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே ராகுல் மற்றும் பிரியங்காவிடம் உத்தரபிரதேச போலீசார் நடந்து கொண்ட விதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் கண்டித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேச போலீசார் தங்களுக்கென்று தனியாக ஒரு சட்டத்தை வைத்திருக்கின்றனர். நாட்டின் எந்த சட்டத்தையும் அவர்கள் பின்பற்றமாட்டார்கள்’ என தெரிவித்தார்.

அமைதியாக போராடியவர்களை உத்தரபிரதேச போலீசார் தடுத்து கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த தலைவர்களை கோர்ட்டு விடுவிக்கும் என நம்பிக்கையும் தெரிவித்தார்.

முன்னதாக யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரியங்கா கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு யோகி ஆதித்யநாத் ஏதாவது செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 11 கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்துக்காக போராடினோம்.

இந்துக்களின் காவலர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் எல்லாரும் இந்துக்கள்தான். ஆனால் மகளின் சிதைக்கு தீ மூட்ட தந்தையை அனுமதிக்கக்கூடாது என்றோ, குடும்பத்தினரை அனுமதிக்கக்கூடாது என்றோ இந்து சட்டத்தில் எங்கு எழுதியிருக்கிறது? இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு செய்தது மிகப்பெரும் அநீதி.  இவ்வாறு பிரியங்கா கூறினார்.

கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story