கொரோனா பாதிப்பில் இருந்து டிரம்ப் விரைவில் குணம் அடைய வேண்டும்- பிரதமர் மோடி டுவிட்


கொரோனா பாதிப்பில் இருந்து டிரம்ப் விரைவில் குணம் அடைய வேண்டும்- பிரதமர் மோடி டுவிட்
x
தினத்தந்தி 2 Oct 2020 6:05 AM GMT (Updated: 2 Oct 2020 6:05 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.  உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் அந்நாட்டில் வரும் நவம்பர் 3 ஆ,ம் தேதி அதிபர் தேர்தலும் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் சிகிச்சை நடைமுறைகளை தொடங்கியுள்ளனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் அவரது மனைவி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி, டுவிட்டரில் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர்  கொரோனா தொற்றில் இருந்து விரைவாக மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெற விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

Next Story