அதிபர் ஆட்சி முறையை நோக்கி இந்தியா செல்கிறது- மம்தா பானர்ஜி விமர்சனம்
அதிபர் ஆட்சி முறையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் பலியான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற திரிணாமுல் எம்.பி.,க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் திரிணாமுல் எம்.பி., ஓ.பிரையன் கீழே தள்ளப்பட்டு விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும், மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ், நேற்று கண்டன ஊர்வலம் நடத்தியது. கொல்கத்தாவில் நடந்த ஊர்வலத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது: கொரானாவை விட, மிக கொடிய தொற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அராஜகத்தை, கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த அநீதிகளுக்கு எதிராக, அனைவரும் அணி திரள வேண்டும்
ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி என அதிபர் ஆட்சி முறையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் சூப்பர் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை” என்றார்.
Related Tags :
Next Story