மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை, திரிணாமூல் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பாரக்போர். மாவட்ட பாஜக கமிட்டி உறுப்பினராகவும் முன்னாள் கவுன்சிலருமான மனிஷ் சுக்லா மாலை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாரக்போர் நகரில் உள்ள காவல் நிலையம் அருகே, உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டு இருந்த மனிஷ் சுக்லா மீது, இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த மனிஷ் சுக்லா மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மனிஷ் சுக்லா கொல்லப்பட்டதற்கு ஆளும் திரிணாமூ காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 12 மணி நேரம் முழு அடைப்பு போராட்டத்திற்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட பாரக்போர் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள கவர்னர் ஜகதீப் தன்கார், காவல் துறை இயக்குநர் மற்றும் உள்துறை செயலர் இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் விடுத்துள்ளார்.
மனிஷ் சுக்லா கொலை செய்யப்பட்டதற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறியுள்ள திரிணாமூல் காங்கிரஸ், உள்கட்சி மோதலால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத்தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story