சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாது; பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு


சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாது; பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு
x
தினத்தந்தி 8 Oct 2020 1:48 PM GMT (Updated: 8 Oct 2020 1:48 PM GMT)

சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க பாதுகாப்பு நடைமுறை விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

புதுடெல்லி

சீனாவின் பெரியதொரு ஏற்றுமதி-இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. ஆனால், இந்தியாவிடம், தனது சரக்குகளையெல்லாம் விற்று லாபம் பார்த்த சீனா, எல்லையில் வாலாட்டத் தொடங்கியது. இதையடுத்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

டிக்-டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிரடியாக தடை விதித்தது.

இதோடு நிற்காமல், ரயில்வே, மின்சாரத்துறை, சாலைப் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒப்பந்த பணிகளை மேற்கொண்டிருந்த சீன நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக வெளியேற்றியது.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு நிறுவனங்கள், நம் நாட்டோடு வர்த்தகம் புரிவதற்கான, புதிய விதிகளுடன் கூடிய பாதுகாப்பு கட்டமைப்பை, ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக கருதப்படும் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவி, நடைமுறைப்படுத்துவதில், சீனாவை எந்த சூழலிலும் சார்ந்திருக்க கூடாது என்பது, மத்திய அரசு தெளிவாக உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

முதற்கட்டமாக, ஜப்பானிடமிருந்து, 5ஜி தொழில்நுட்பங்களை பெற்று, பயன்படுத்தவும், மேலும், அந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டால், ஐரோப்பிய நாடுகளிடமிருந்தோ, அல்லது அமெரிக்காவிடமிருந்தோ நுட்பங்களையும், கருவிகளையும் பெற மத்திய அரசு திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகிறது. 

தொலைத்தொடர்புத்துறையில் மட்டுமின்றி, மின்சாரம், எரிசக்தித்துறை, சாலை, ரயில்வே உள்ளிட்ட போக்குவரத்துறையில், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை, அனுமதிப்பதற்கான, பாதுகாப்பு நடைமுறைகளையும், புதிதாக ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

அதாவது, இந்தியாவில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள், நுட்பங்கள் உட்பட, அனைத்திலும், அது எந்த நாட்டின் தயாரிப்பு என்பதையும், அதன் பின்னணி விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை உருவாக்கும் நடவடிக்கையை , மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க மத்திய அரசுதிட்டமிட்டு உள்ளது. உள்ளது.


Next Story