நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அவதூறு- சிபிஐ விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக  அவதூறு- சிபிஐ விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 12 Oct 2020 2:25 PM GMT (Updated: 12 Oct 2020 2:25 PM GMT)

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமூக ஊடக பதிவுகளில் "தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமராவதி,

ஆந்திராவில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இவ்விவகாரம் தொடர்பாக ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் 49- பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

நீதிபதிகளை அவதூறாக பேசிய அனைவர் மீதும் சிபிஐ வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்  என்றும் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும்  நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமூக ஊடக பதிவுகளில் "தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன"  எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

ஆந்திராவில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட தனது அரசுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகள் செயல்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில்,  ஆந்திர உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. 

ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியது ஏன்?

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியேற்றது. ஜெகன்மோகன் ரெட்டி அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு எதிராக மாநில ஐகோர்ட்டு சுமார் 100 உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. மாநில தலைநகரை மாற்றும் விவகாரம், சட்ட மேலவை கலைப்பு, மாநில தலைமை தேர்தல் கமிஷனரை மாற்றும் முடிவு போன்றவற்றுக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதைப்போல ஆற்று சூழலியலை பாதுகாப்பதற்காக அவற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என மாநில அரசு எடுத்த முடிவுக்கும் ஐகோர்ட்டு தடை விதித்து இருக்கிறது.

இவ்வாறு தனது அரசின் திட்டங்களுக்கு ஐகோர்ட்டு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போடுவதால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, இவற்றின் பின்னணியில் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக கருதுகிறார். குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி மூலம் மாநில ஐகோர்ட்டு நடவடிக்கைகளை அவர் கட்டுப்படுத்துவதாக ஜெகன்மோகன் ரெட்டி எண்ணுகிறார். இதை உறுதி செய்யும் வகையில் முந்தைய தெலுங்குதேசம் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதித்துள்ள ஐகோர்ட்டு, அது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் விரக்தியடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மற்றும் மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 6-ந்தேதி எழுதிய அந்த கடிதத்தின் நகலை அவரது முதன்மை ஆலோசகர் அஜெயா கல்லம் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த கடிதத்தை 8-ந்தேதி ஜெகன்மோகன் ரெட்டி அனுப்பியதாக அவர் கூறினார். அந்த 8 பக்க கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது:-

ஜனநாயக நிறுவனங்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மூலம் சந்திரபாயு நாயுடு, அரசியல்மயமாக்குவது மிகுந்த வேதனையையும் வலியையும் ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஒருவர் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆதாரம் இருக்கிறது. தற்போது மாநில நீதித்துறையில் அவரது தலையீடு இருப்பதன் மூலம் அது தெளிவாகி இருக்கிறது.

இதன் மூலம் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மைகள் புலப்படும். எனவே மாநில நீதித்துறையின் நடுநிலைமை தொடர்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு எதிராக மாநில முதல்-மந்திரி ஒருவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

ஜெகன்மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது முதல்-மந்திரி கூறியுள்ள குற்றச்சாட்டை தெலுங்குதேசம் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவருமான ராமகிருஷ்ணுடு, ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஜெகன்மோகன் ரெட்டி மீது 43 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. அவரது ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. 

இப்படி தீவிர குற்றச்சாட்டுகளை கொண்ட ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடுத்தவர்களை பற்றி கூற எந்த தகுதியும் இல்லை. இது சாத்தான் வேதம் ஓதும் கதையாக இருக்கிறது’ என்று தெரிவித்தார். மக்கள் தங்களுக்கு பணி செய்வதற்காக கொடுத்த அதிகாரத்தை தனது சுயநலத்துக் காக ஜெகன்மோகன் ரெட்டி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய ராமகிருஷ்ணுடு, சி.பி.ஐ. கோர்ட்டில் தன் மீதான ஊழல் வழக்குகள் தினசரி விசாரணைக்கு வர இருக்கும் நேரத்தில், நீதித்துறையை அவமதிக்கும் முயற்சி இது எனவும் கூறினார்.

Next Story