லடாக் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் 44 பாலங்களை ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்


லடாக் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் 44 பாலங்களை ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2020 3:15 AM IST (Updated: 13 Oct 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

லடாக் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்.

புதுடெல்லி, 

லடாக், காஷ்மீர், அருணாசலபிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளில் எல்லை சாலை அமைப்பு 44 பாலங்களை கட்டி முடித்துள்ளது.

இந்த பாலங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், அருணாசலபிரதேசத்தில் நெசிபு என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட அடிக்கல் நாட்டி வைத்தார்.

நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

எல்லை சாலை அமைப்பு, கொரோனா காலத்திலும் ஓய்வின்றி உழைத்து இந்த பாலங்களை கட்டி முடித்துள்ளது. உட்புற பகுதிகளில் பனிப்பொழிவை அப்புறப்படுத்துவதையும் தாமதமின்றி செய்தது.

நமது வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளை நீங்கள் அறிவீர்கள். முதலில் பாகிஸ்தானும், இப்போது சீனாவும் ஒரு திட்டத்துடன் எல்லை பிரச்சினையை உருவாக்கி வருகின்றன. இந்த நாடுகளுடன் நமக்கு 7 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு எல்லை இருக்கிறது.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடனான தலைமையின் கீழ் இந்த பிரச்சினைகளை சமாளிப்பதுடன், இப்பகுதிகளில் மாபெரும், வரலாற்று சிறப்புமிக்க மாறுதல்களை செய்து வருகிறோம்.

பெரும்பாலான பாலங்கள் அமைந்துள்ள இடங்கள், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் ஆகும். ஆண்டு முழுவதும் அங்கு போக்குவரத்து செயல்பட முடியாமல் இருந்தது.

இப்போது, படையினரையும், ஆயுதங்களையும் விரைவாக கொண்டு செல்வதற்கு இந்த பாலங்கள் உதவும். அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இவை உதவும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

Next Story