லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை - மத்திய அரசு தகவல்
லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி ,
வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கட்டுமானம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த 7 இந்தியர்கள் கடந்த மாதம் 14-ந்தேதி மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். இந்தியா திரும்புவதற்காக தலைநகர் திரிபோலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஆஷ்வெரிப் என்ற இடத்தில் அவர்கள் கடத்தப்பட்டனர்.
ஆந்திரா, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த அந்த 7 தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்களும் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “லிபியாவில் செப்டம்பர் 14-ந்தேதி கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் இறுதியாக நேற்று விடுவிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அவர்கள் 7 பேரும் தற்போது நலமாக உள்ளனர். பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story