சபரிமலை தரிசனம்: கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் அவசியம்; முதல் மந்திரி அறிவிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என முதல் மந்திரி கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு அமலானது. இதனால், பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் வசதிக்காவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக மதவழிபாட்டு தலங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், கொரோனா பரவலால் சில பெரிய கோவில்கள் திறக்கப்பட்ட வேகத்திலேயே மீண்டும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அவதியுற்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நாளை முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல் மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறும்பொழுது, நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.
நாளொன்றுக்கு 250 பேரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதேபோன்று அய்யப்ப பக்தர் மலையேறுவதற்கு தகுதியானவர் என்று உறுதியளிக்கும் மருத்துவ சான்றிதழும் வைத்திருக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story