தெலுங்கானாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.
ஐதராபாத்,
வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநில மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து பேரிடரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 24 குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் மாலையில் கனமழை பெய்ய தொடங்கியது. தலைநகர் ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஐதராபாத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. மழைக்கு வீடுகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்தன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தெலுங்கானாவில் 15 பேர் உயிரிழந்து இருந்தனர்.
தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மழை பெய்ததால், தெலுங்கானாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2 நாட்களும் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையை தொடர்ந்து முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அவசரகால உயர்மட்ட அளவிலான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 4 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் ஐதராபாத் மற்றும் நகரை சுற்றியுள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
இதுவரை ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி தெலுங்கானா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை 50 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story