200 பயங்கரவாத தாக்குதல்கள்; எங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறு: பல்வீந்தர் சிங் மனைவி பேட்டி


200 பயங்கரவாத தாக்குதல்கள்; எங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறு:  பல்வீந்தர் சிங் மனைவி பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2020 4:40 PM IST (Updated: 17 Oct 2020 4:40 PM IST)
t-max-icont-min-icon

200 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்த எங்களுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறு என்று சுட்டு கொல்லப்பட்ட பல்வீந்தர் சிங்கின் மனைவி பேட்டியளித்து உள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டவர் பல்வீந்தர் சிங் (வயது 62).  தைரியத்திற்கான செயலுக்காக இந்திய ராணுவத்தின் உயரிய சவுரியா சக்ரா விருது வென்ற பெருமைக்குரியவர்.

இவரையும், இவரது குடும்பத்தினரையும் பல ஆண்டுகளாக தாக்குதல் பட்டியலில் பயங்கரவாதிகள் வைத்திருந்து உள்ளனர்.  இதனால் எந்நேரமும் தாக்கப்படலாம் என்பதனை கவனத்தில் கொண்டு சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கி வந்தது.

பஞ்சாப்பில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் முதல் மந்திரியான கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில் உள்ளூர் போலீசாரின் பரிந்துரையின்பேரில் ஒரு வருடத்திற்கு முன் பல்வீந்தருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் இரண்டு பேர் பல்வீந்தரின் வீட்டில் வைத்து அவரை சுட்டு கொன்று விட்டு தப்பினர்.  இதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொள்ள டி.ஜி.பி.க்கு முதல் மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.

அரசு ஆவணத்தின்படி, கடந்த 1990ம் ஆண்டில் குறைந்தது 200 பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தப்பி பிழைத்துள்ளனர்.

சிங், அவரது சகோதரர் மற்றும் அவர்களின் மனைவிகள், அரசு வழங்கிய பிஸ்டல்கள் மற்றும் ஸ்டென் வகை துப்பாக்கிகளை கொண்டு 5 மணிநேரம் போராடி பயங்கரவாதிகளை எதிர்கொண்டு உள்ளனர்.  இந்த தைரிய செயலுக்காக அவர்களது குடும்பம் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், சிங்கை பழி தீர்த்துள்ளனர்.  இதுபற்றி சிங்கின் மனைவி ஜக்தீஷ் கவுர் கூறும்பொழுது, எங்களது குடும்பத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான 42 எப்.ஐ.ஆர். பதிவுகள் உள்ளன.  பதிவுகளில் இல்லாத கணக்கற்ற பிற தாக்குதல்களும் நடந்துள்ளன.  எங்களுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறு.

இதற்கு அரசு, அதன் நிர்வாகம் மற்றும் உளவு அமைப்புகளே பொறுப்பு.  நாங்கள் மீண்டும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டோம்.  ஆனால் பலனில்லை.  பாதுகாப்பு வளையத்தில் இருப்பது அந்தஸ்து என நினைத்து அதனை கேட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.  எங்களுக்கு உண்மையாகவே பாதுகாப்பு தேவையாக உள்ளது.  ஆனால் வழங்கப்படவில்லை என வேதனையுடன் கூறினார்.

Next Story