நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விரைவாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது எப்படி? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை


நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விரைவாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது எப்படி? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 18 Oct 2020 12:15 AM GMT (Updated: 17 Oct 2020 9:27 PM GMT)

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

புதுடெல்லி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தடுப்பூசியை விரைவில் உருவாக்கி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக இந்திய விஞ்ஞானிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு நாட்டில் உள்ள மருந்து ஆய்வகங்கள் இரவு-பகல் பாராமல் ஓய்வின்றி உழைத்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் இந்திய விஞ்ஞானிகள் பெற்று உள்ளனர். அந்த வகையில் பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில்3 தடுப்பூசிகள் முன்னணி கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரம் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

எனினும் இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கி அனைத்து மக்களையும் பாதுகாப்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது. அந்த வகையில் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்காக மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி தடுப்பூசி உருவாக்க நிலைகள், அதன் பரிசோதனை நிலவரம், மக்களுக்கு வினியோகிக்கும் முறை போன்றவற்றை கேட்டறிந்து வருகிறார். அத்துடன் விரைவான வினியோகத்துக்காக பல்வேறு பரிந்துரைகளையும் பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

இந்த வரிசையில் நேற்றும் அவர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் நாட்டின் கொரோனா நிலவரம், தடுப்பூசி வினியோகத்துக்கான தயார் நிலை, வினியோக முறை, நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தடுப்பூசி உருவாக்கல் மற்றும் வினியோகம் தொடர்பாக நிபுணர்களுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார். அப்போது நாட்டில் தொடர்ந்து சரிந்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார். அதே நேரம் இந்த முன்னேற்றத்தால் மனநிறைவோ, மெத்தனமோ கூடாது என எச்சரிக்கையும் விடுத்தார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர வலியுறுத்திய அவர், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், ஒழுங்காக கை கழுவுதல், தூய்மையை பராமரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறும், வருகிற பண்டிகை நாட்களில் இன்னும் கவனமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக இந்தியா உருவாக்கிய 3 தடுப்பூசிகள் முக்கிய கட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. இதில் 2 தடுப்பூசிகள் 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையிலும், ஒன்று 3-ம் கட்ட சோதனையிலும் உள்ளன.

இதைப்போல ஆப்கானிஸ்தான், பூடான், வங்காளதேசம், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்தை ஆகிய அண்டை நாடுகளிலும் தடுப்பூசி ஆய்வுத்திறனை அதிகரிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள் இணைந்து உழைத்து வருகின்றனர். இதில் வங்காளதேசம், மியான்மர், கத்தார் மற்றும் பூடான் நாடுகளில் இருந்து மனிதர்களிடம் தடுப்பூசியை பரிசோதிப்பதற்கான கோரிக்கைகளும் வந்துள்ளன.

எனவே சர்வதேச சமூகத்துக்கு உதவும் வகையில், நமது சேவையை உடனடி அண்டை நாடுகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஒட்டுமொத்த உலகுக்கும் தடுப்பூசிகள், மருந்துகள் வழங்குவதுடன், தடுப்பூசி வினியோக அமைப்புக்கான தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) தளங்களையும் விரிவுபடுத்த வேண்டும்.

இந்தியாவில் தடுப்பூசி சேமிப்பு, வினியோகம் மற்றும் நிர்வாகத்துக்காக மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய துறையினருடன் ஆலோசித்து வரும் கொரோனா தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய குழுவினர் இது தொடர்பாக விரிவான செயல் திட்டத்தை உருவாக்கி வழங்கி உள்ளனர். குறிப்பாக தடுப்பூசிக்கான முன்னுரிமை மற்றும் வினியோகம் குறித்து மாநிலங்களுடன் இந்த நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது.

நாட்டின் புவியியல் நீட்டம் மற்றும் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு, விரைவாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைவாக கிடைக்கும் வகையில் தடுப்பூசி வினியோக அமைப்பை உருவாக்க வேண்டும்.

தடுப்பூசிக்கான பொருட்கள், வினியோகம், நிர்வாகம் போன்றவற்றில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கடுமையாக வைக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட சேமிப்பு சங்கிலி, வினியோக நெட்வொர்க், கண்காணிப்பு செயல்முறை, நவீன அணுகல், ஊசி உள்ளிட்ட துணை உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.

வெற்றிகரமான தேர்தல்கள், பேரிடர் நிர்வாகம் போன்றவற்றில் நல்ல அனுபவங்களை நாம் பெற்றுள்ளோம். அந்த வழியில் தடுப்பூசி வினியோகம் மற்றும் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும். இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்ட அளவிலான துறைகள், சிவில் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், குடிமக்கள் மற்றும் அனைத்து துறை நிபுணர்களையும் ஈடுபட செய்ய வேண்டும்.

இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் ஒரு வலிமையான தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பாக இருக்க வேண்டும். நமது சுகாதார அமைப்புக்கு நீடித்த மதிப்பை கொடுக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர், முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அதில் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரசில் கண்டறியப்பட்ட எந்தவொரு பெரிய பிறழ்வும் ஒரு பயனுள்ள தடுப்பூசியின் வளர்ச்சியை தடுக்கக்கூடும் என்ற கவலைகள் இருந்தன. ஆனால் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை நடத்திய 2 ஆய்வுகளில், கொரோனா வைரஸ் மரபணு ரீதியாக நிலையானது என்றும், பெரிய பிறழ்வு எதுவும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story