இந்தியாவில் தொடர்ந்து குறையும் பாதிப்பு: கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.03 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52%. குணமடைந்தோர் விகிதம் 88.03 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தடுப்பூசியை விரைவில் உருவாக்கி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக இந்திய விஞ்ஞானிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு நாட்டில் உள்ள மருந்து ஆய்வகங்கள் இரவு-பகல் பாராமல் ஓய்வின்றி உழைத்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் இந்திய விஞ்ஞானிகள் பெற்று உள்ளனர். அந்த வகையில் பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில்3 தடுப்பூசிகள் முன்னணி கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரம் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
எனினும் இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கி அனைத்து மக்களையும் பாதுகாப்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது. அந்த வகையில் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட இன்று காலை 8 மணி நிலவரப்படி,
இந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 74,32,680ல் இருந்து 74,94,552 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,033 பேர் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக அதிகரித்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 72,615 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 65,97,209-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.
கொரோனா பாதித்த 7,83,311 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடா்ந்து 10-ஆவது நாளாக, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒன்றரை மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக 8 லட்சத்தைவிட குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52%. குணமடைந்தோர் விகிதம் 88.03 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 9.70 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9.42 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story