பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது- செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது: மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்


பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது- செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது: மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 3:00 AM IST (Updated: 19 Oct 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

செய்தித்தாள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தீவிரமடைந்து உள்ளது. அங்கு புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தினமும் பல மடங்கு அதிகரிக்கிறது.

குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு (ஆகஸ்டு 22-ந் தேதி) முன் அங்கு 54 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, சுமார் 200 பேர் மட்டுமே இறந்திருந்தனர். ஆனால் தற்போது 3.3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 1,139 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, அவர் ‘ஞாயிறு உரையாடல்’ என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும் தனது சமூக ஊடக பின்தொடர்பாளர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்படி நேற்று நடந்த உரையாடலின்போது, ஒருவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘கேரளாவில் கடந்த ஜனவரி 30-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை வெறும் 499 பேர்தான் பாதிக்கப்பட்டு, 2 பேர் பலியாகி இருந்தனர். ஆனால் ஓணம் பண்டிகையின்போது அங்கு நிலவிய மொத்த அலட்சியத்துக்கான விலையை கேரளா தற்போது செலுத்துகிறது. இந்த பண்டிகைக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மக்கள் பொருட்கள் வாங்கவும், சுற்றுலாவுக்குமாக மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்தனர். இது பல மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு வழி வகுத்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.

கேரளா அனுபவித்து வரும் துன்பத்தை பிற மாநிலங்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வருகிற பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய ஹர்சவர்தன், ‘வருகிற பண்டிகை நாட்களை மக்கள் தங்கள் பிரியமானவர்களுடன் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாட்டில் மருத்துவ ஆக்சிஜனின் இருப்பு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘நாடு முழுவதும் தினமும் 6,400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் தேவைக்கு ஏற்ப இதை அதிகரிக்க முடியும். மாநிலங்களுக்கு 1,02,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. ஆக்சிஜன் தேவை மற்றும் வினியோக பணிகளை உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு வருகிறது’ என்றார்.

செய்தித்தாள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என கூறிய ஹர்சவர்தன், எனவே இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் செய்தித்தாள்கள் வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் உகானில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தோன்றியது என சீனா கூறியிருப்பது குறித்து ஹர்சவர்தன் கூறும்போது, சீனாவின் இந்த கூற்றுக்கு வலிமையான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். எனவே சீனாவின் உகானில் மட்டுமே முதன் முதலில் கொரோனா தோன்றியது என்பதை உலக நாடுகள் அங்கீகரித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story