இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு


இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 18 Oct 2020 11:30 PM GMT (Updated: 18 Oct 2020 10:22 PM GMT)

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

புதுடெல்லி, 

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. சுமார் 1 லட்சத்தை தொடும் அளவுக்கு சென்ற தினசரி தொற்று தற்போது 60 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே தொடர்கிறது.

அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரை விட அதிக எண்ணிக்கையிலானோர் தினமும் குணமடைந்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 72 ஆயிரத்து 614 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 65 லட்சத்து 97 ஆயிரத்து 209 ஆக அதிகரித்து விட்டது. இதனால் குணமடைந்தவர்கள் விகிதம் 88.03 ஆக அதிகரித்து இருக்கிறது.

புதிதாக குணமடைந்தவர்களில் 79 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், ஒடிசா ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் மராட்டியர்கள் மட்டுமே 14 ஆயிரத்துக்கு அதிகமானோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணமடைவதால் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கை கடந்த 1½ மாதங்களுக்கு பின் முதல் முறையாக நேற்று முன்தினம் 8 லட்சத்துக்கு கீழே குறைந்தது.

இதில் நேற்றும் சரிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 ஆக குறைந்துள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 10.45 சதவீதம் ஆகும்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பொறுத்தவரை மத்திய பிரதேசம், குஜராத், பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், அருணாசல பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட 22 மாநிலங்கள மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 ஆயிரத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைப்போல தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், சத்தீஷ்கார், டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய 10 மாநிலங்களில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆனால் 50 ஆயிரத்துக்கு குறைவான நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அதேநேரம் மராட்டியம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் தலா 50 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 61 ஆயிரத்து 871 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் அதிகபட்சமாக மராட்டியர்கள் மட்டுமே 9 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்தியாவில் மேற்படி 24 மணி நேரத்தில் 1,033 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் சற்று அதிகம் ஆகும். இதன் மூலம் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டின் சாவு விகிதம் 1.52 என்ற அளவிலேயே நீடிக்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக பாதிப்பை பெற்று 2-ம் இடத்தில் இந்தியா நீடிக்கிறது. பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தில் இருக்கிறது. ஆனால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 9 லட்சத்து 70 ஆயிரத்து 173 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் நாட்டின் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 9 கோடியே 70 லட்சத்து 173 ஆக அதிகரித்து இருக்கிறது. மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story