வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை


வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2020 5:45 AM IST (Updated: 19 Oct 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் படிப்படியாக சரிந்துள்ளது. நேற்று கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழே வந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலை பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

இந்த குழுவின் தலைவர் ஐதராபாத் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் எம்.வித்யாசாகர் ஆவார்.10 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு ஆராய்ந்து, ‘இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நோயின் முன்னேற்றம், முன்கணிப்பு மற்றும் ஊரடங்கு பொதுமுடக்கத்தின் தாக்கங்கள்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக் கிய அம்சங்கள் வருமாறு:-

* இந்தியாவில் ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் கடந்த ஜூன் மாதம் நாட்டில் கொரோனா உச்சம் தொட்டு 1 கோடியே 40 லட்சம் பேருக்கு மேல் தாக்கி இருக்கும். நாம் தயார் நிலையில் இல்லாமல் இருந்தால், சுகாதார அமைப்புகள் நிரம்பி வழிந்திருக்கும். இறப்பும் அதிகளவில் இருந்து இருக்கும். ஊரடங்கு பொதுமுடக்கம் பிறப்பிக்க மே மாதம் வரை காத்திருந்து இருந்தால், ஜூன் மாதத்திற்குள் பாதிப்பு 50 லட்சமாக இருந்திருக்கும்.

* உண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை செப்டம்பர் மாதம் உச்சம் தொட்டது. ஏறத்தாழ 10 லட்சம் பேர் அப்போது சிகிச்சை பெற்று வந்தனர்.

* ஊரடங்கு பொதுமுடக்கம் மட்டும் போடாமல் இருந்திருந்தால், மிக குறைந்த காலத்திலேயே இறப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். அதிகபட்சம், கொரோனா பலி எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்திருக்கும்.

* முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றுடன் ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி இருந்ததால், பிற நாடுகளை விட இந்தியா கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்பட முடிந்தது. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையைஇந்தியா கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பில் ஆறில் ஒரு பங்கை பெற்றிருக்கிறது. ஆனால் உலகளவில் பலியில் 10 சதவீதத்தை மட்டுமே இந்தியா சந்தித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்புவீதம் 2 சதவீதத்துக்கும் குறைவு என்பது உலகின் மிக குறைந்த அளவில் ஒன்று.

* தற்போது அமலில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை முழு அளவில் தொடர வேண்டும். அப்படி தொடராவிட்டால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை காண வேண்டியது வரும்.

* தற்போது 30 சதவீத மக்கள் ஆன்டிபாடிகளை (நோய் எதிர்ப்பு சக்தியை) பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்டு மாத இறுதியில் 14 சதவீதமாக இருந்தது.

* நாம் அனைவரும் கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி வந்தால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்- பிப்ரவரி மாத இறுதியில் குறைந்த எண்ணிக்கையில், அறிகுறி தொற்றுடன் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்தி விடலாம்.

* வரும் பண்டிகை காலத்திலும், குளிர்காலத்திலும் தொற்று பாதிப்பு வாய்ப்பு அதிகரிக்கலாம். ஆனால் சரியான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால், அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கலாம்.

* சுகாதார வசதிகளில் அபாயமான சூழல் உருவாகாத நிலையில், மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ புதிதாக ஊரடங்கு பொது முடக்கம் தேவையில்லை.

இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.


Next Story