உ.பி.யில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி: கொலை வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது
தேடப்பட்டு வந்த பா.ஜனதா பிரமுகர் திரேந்திர பிரதாப்சிங் நேற்று லக்னோவில் கைது செய்யப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் துர்ஜான்பூர் கிராமத்தில், கடந்த 15-ந் தேதி, ரேஷன் கடைகள் ஒதுக்குவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில், உள்ளூர் பா.ஜனதா பிரமுகரான திரேந்திர பிரதாப்சிங் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் ஜெயபிரகாஷ் பால் காமா (வயது 46) என்பவர் பலியானார்.
சம்பவத்தின்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரி மற்றும் போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான பா.ஜனதா பிரமுகர் திரேந்திர பிரதாப்சிங் தலைமறைவாகி விட்டார். அவரைப் பற்றி தகவல் அளித்தால், ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் அடைக்கலம் அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டி இருந்தார். அதை சுரேந்திரசிங் மறுத்தார்.
இந்த நிலையில், தேடப்பட்டு வந்த பா.ஜனதா பிரமுகர் திரேந்திர பிரதாப்சிங் நேற்று லக்னோவில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் பல்லியாவுக்கு அழைத்துச் சென்றனர். அதுபோல், அவருடைய கூட்டாளிகள் 4 பேர், பல்லியாவில் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story