கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை தொடர வேண்டும் - தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
லேசான சரிவு காணப்பட்டாலும் கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை தொடர வேண்டும் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொல்கத்தா,
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவலின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது. குறிப்பாக இந்த பிராந்தியத்தில் புதிய தொற்று பாதிப்புகளில் 6 முதல் 8 சதவீதம் வரை வீழ்ச்சி காணப்படுகிறது. அதற்காக மெத்தனமாக இருக்கக்கூடாது என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில்,
‘சமீபத்திய வாரங்களில் குறைந்து வரும் தொற்று எண்ணிக்கையில் எந்தவித மனநிறைவும் கூடாது. இந்த பிராந்தியத்தில் தற்போதும் அதிக எண்ணிக்கையில் புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுநோயை முறியடிக்க நம்மால் முடிந்தவரை சிறந்த தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும்’ என்று கூறினார்.
எதிர்வரும் பண்டிகை காலங்கள் மற்றும் குளிர்காலத்தில் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் நமது அயராத முயற்சிகளை தீவிரமாக தொடர வேண்டும் என கூறிய அவர், சமூக இடைவெளி, கை கழுவுதல், முக கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை வீரியமாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story