இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பின் 50 ஆயிரத்திற்கு கீழ் வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு
கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோன வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளையே பதம் பார்த்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஊரடங்குக்க்கு மத்தியிலும் காட்டுத்தீ போல பரவிய கொரோனா வைரஸ், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தற்போது படிபடியாக இறங்கு முகத்தில் உள்ளது.
செப்டம்பர் மாதம் 17-ந் தேதி ஒரு நாளின் அதிகபட்ச வைரஸ் பாதிப்பாக 97 ஆயிரத்து 894 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. இதனால் 1 லட்சத்துக்கும் அதிகமாக தினசரி தொற்று பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அந்த நிலை வரவில்லை. மாறாக கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் புதிதாக 46 ஆயிரத்து 790 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பிறகு தினசரி தொற்று பாதிப்பு 50 ஆயிரத்துக்கு கீழே வந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.
கடைசியாக கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி 47 ஆயிரத்து 703 பேருக்கு பாதிப்பு பதிவாகி இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்தாலும், விழிப்புடன் இருக்காவிட்டால் குளிர் காலத்தில் 2-வது அலை தாக்க வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளதால், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும்.
Related Tags :
Next Story