பாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே: தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்


பாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே: தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 4:43 PM IST (Updated: 21 Oct 2020 4:43 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே அந்தக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளார்.

மும்பை,

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் மந்திரியாக இருந்தவர் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. எனினும் ஊழல் புகாரில் சிக்கி 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட கூடவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

மேலும் பா.ஜனதா மீது அதிருப்தியில் உள்ள அவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்நிலையில், பாஜகவில் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஏக்நாத் கட்ஸே விலகி உள்ளார். அதனை உறுதிபடுத்தும் விதமாக மராட்டிய மாநில பாஜக தலைவருக்கு கட்சே ராஜிநாமா கடிதத்தை புதன்கிழமை அனுப்பினார். வரும் வெள்ளிக்கிழமை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் கட்ஸே இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸின் மாநிலத்தலைவரும், மராட்டிய நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

பாஜக தலைவர் ஏக்நாத் கட்ஸே அந்த கட்சியிலிருந்து விலகிவிட்டார். மறைந்த கோபிநாத் முன்டேவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உடையவர் ஏக்நாத் கட்ஸே. வரும் வெள்ளிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

அவரின் வருகை நிச்சயம் தேசிய வாத காங்கிரஸை வலுப்படுத்தும். பாஜகவில் பல ஆண்டுகளாக கட்ஸேவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பார்க்கிறார்கள். மூத்த வீரர் கட்ஸே ஏன் விலகினார் என்று பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டும். தேசியவாத காங்கிரஸில் கட்ஸேவுக்கு அளிக்கும் பதவி குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும். கட்ஸேவுடன் ஏராளமான தொண்டர்கள் தேசியவாத காங்கிரஸில் இணைய காத்திருக்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story