மேற்கு வங்காள மக்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர் - பிரதமர் மோடி உரை
மேற்கு வங்காள மக்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
துர்கா பூஜை இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் பிரதிபலிப்பதாக மேற்கு வங்காள மக்களுக்கு ஆற்றிய உரையில் பெங்காலி மொழியில் பிரதமர் மோடி பேசினார்.
நவராத்திரி விழாவையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடி துர்கா பூஜை வாழ்த்து செய்தியை மேற்கு வங்காள மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “துர்கா பூஜை திருவிழா இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் பிரதிபலிக்கும் ஒரு திருவிழா. வங்காளத்திலிருந்து வரும் மரபுகள் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். விழாக்காலங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்க மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் சுமார் 30 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் 90 லட்சத்திற்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நமது விவசாயிகளுக்கு உதவுவதுடன, அவர்கள் அதிகாரம் பெற உதவ வேண்டும்.
மே.வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக்காக சுயநலமின்றி உழைத்தனர். இந்த மாநிலத்தை சேர்ந்த தியாகிகள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். இன்னும் சில சாதனையாளர்கள், இந்தியாவின் பாரம்பரியத்தை உலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்தியாவை, சர்வதேச அளவில் பெருமையடைய செய்தனர். இந்தியாவின் வளர்ச்சியில் மே.வங்காள மக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story