இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது - பிரதமர் மோடி
பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பாட்னா,
பீகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- “ கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பான பங்களிப்பை அளித்த பீகார் மக்களை நான் பாரட்டுகிறேன். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பீகார் அரசு எடுத்த நடவடிக்கைகளும், மாநில மக்கள் செயல்பட்ட விதமும் மிகவும் பாராட்டுக்கு உரியது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பீகாரின் மண்ணின் மைந்தர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து தேசத்தின் பெருமையை காப்பாற்றினர்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370- ஐ தேசிய ஜனநாயகக் கூட்டணி ரத்து செய்தது. ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சிறப்பு அந்தஸ்தை வழங்குவோம் என சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறிவிட்டு, பீகார் மக்களிடம் வாக்கு துணிச்சலாக வாக்கு கேட்கின்றனர். நாட்டை காப்பாற்ற எல்லைகளுக்கு தங்கள் மகன்களையும் மகள்களையும் அனுப்பிய பீகாரை அவமதிக்கும் செயலாக இது இல்லையா?
கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது. இருளில் இருந்து மீண்ட பீகார் மக்கள் மீண்டும் இருளுக்கு செல்லமாட்டார்கள். பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன” இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story