இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் சாவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உலகில் உயர் ரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு, உணவுமுறை அபாயங்களுக்கு அடுத்தபடியாக அதிகம்பேரை கொல்லும் வியாதியாக காற்று மாசு இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ‘ஸ்டேட் ஆப் குளோபல் ஏர்’ என்கிற அமைப்பு காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டு (2019) உலகில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி 2 நிறுவனங்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
இதன்படி உலகம் முழுவதும் 60 லட்சத்து 70 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. காற்று மாசு அதிகம் பாதிப்பது ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியப்பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வின் முடிவுகள், இந்தியாவில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள், சகாரா பகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் உள்பட உலகம் முழுவதும் 4 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள், பிறந்த ஒரே மாதத்தில் காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.
இந்த இறப்புக்கு, வீட்டில் கிளம்பும் சமையல் புகையும் முக்கிய காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story