கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை- ஹர்சவர்தன்
வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த மாதம் வரை ருத்ரதாண்டவமாடியது. இந்த மாதம் முதல் கொரோனா பரவல் குறையத்தொடங்கி உள்ளது. உயிர்ப்பலிகளும் கணிசமாக சரிந்துள்ளன.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 7 லட்சத்துக்கு கீழே வந்து இருக்கிறது. அதே நேரத்தில் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை விஞ்ஞானிகளும், நிபுணர்களும் தொடர்ந்து விடுத்தவண்ணமாக உள்ளனர். வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுகிறது.
இந்த தருணத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை சந்திப்பதற்கான தயார் நிலை குறித்து, அந்த மாநிலத்தின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நாட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழாக குறைந்து விட்டதையும், தொற்று பாதிப்பு இரு மடங்கு ஆவதற்கான கால கட்டம் 97.2 நாட்களாக அதிகரித்து இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 3 மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை ஆகும். வரும் பண்டிகை காலத்திலும், குளிர் காலத்திலும் கொரோனாவை எதிர்கொள்வதற்கு நாம் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பொருத்தமான நடத்தைகளையும் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் நல்ல நிலையில் இருப்போம்” என்றார்.
Related Tags :
Next Story