தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்


தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 24 Oct 2020 3:22 AM GMT (Updated: 24 Oct 2020 3:22 AM GMT)

மெகபூபா முப்தியின் தேசியக் கொடி குறித்த கருத்துக்கு பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின்  தலைவர் மெகபூபா முப்தி செய்தியாளர்கள் சந்திப்பில் 

என் கொடி இதுதான் (மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி). இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால், மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்.

எங்கள் கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது.

இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்கள் உறவு ஜம்மு காஷ்மீர் கொடியைத் தவிர்த்துக் கிடையாது. எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப் பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டோம்.

நான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல்களில் ஆர்வம் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்தே எனது போராட்டம்.

சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம். இன்றைய இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை, என கூறினார்.

நாட்டின் தேசியக் கொடி குறித்து மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங்  காஷ்மீர் பிரிவினைவாதிகளை விட  காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என கூறி உள்ளார்.

மெகபூபா போன்ற தலைவர்கள் பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள் என்றும், பதவி இருக்கும்வரை நாட்டின் பெருமை பேசிவிட்டு பதவி போனதும் பாகிஸ்தானின் குரலில் பேசுகிறார் என கூறினார்.


Next Story