ஊழலுக்கு எதிராக எந்த சமரசமும் இன்றி அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி


ஊழலுக்கு எதிராக எந்த சமரசமும் இன்றி அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Oct 2020 12:38 PM GMT (Updated: 2020-10-27T18:08:24+05:30)

ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி அரசு முன்னேறிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

‘விழிப்பான இந்தியா, வளமான இந்தியா’ என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி, மாலை 4:45 மணிக்கு காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஊழல் தடுப்பு மற்றும் அமைப்புகளின் கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதுதவிர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

“ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது. ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊழல், அந்நிய செலாவணி முறைகேடு, பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி, பரிசோதனை திறன் போன்றவற்றை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story