புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத ஒதுக்கீடு: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
புதுச்சேரி,
அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் பேசியபோது, “ அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெற முடியும்.
புதுவையில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த 2 மாணவர்கள் புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 11 பேர் மாகி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். ஏனாம் பிராந்தியத்தில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. எனவே இந்த ஆண்டே இந்த 10 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியிருப்பது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்குச் செய்கின்ற அநீதி.
நீட் தேர்வின் முடிவுகள் வந்து மாணவர் சேர்க்கை தொடங்குகின்ற நேரத்தில், புதுச்சேரியில் 27 சதவீதமும், தமிழகத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கினால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். ஆனால், அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசும், இந்திய மருத்துவக் கழகமும் செயல்பட்டு வருகிறது.” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story