உத்தரபிரதேச மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி - மாநில சுகாதாரத்துறை மந்திரி அறிவிப்பு


உத்தரபிரதேச மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி - மாநில சுகாதாரத்துறை மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 10:57 PM GMT (Updated: 2020-10-29T04:27:51+05:30)

பொதுமக்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் இலவசமாக போடப்படும் என்று உத்தரபிரதேச சுகாதாரத்துறை மந்திரி ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில், தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், பீகாருக்கு இலவச தடுப்பூசி என்ற பாரதீய ஜனதாவின் இந்த வாக்குறுதிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும், மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் இலவசமாக போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஜெய் பிரதாப் சிங் இதை தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story