சாலை வழியாக நடந்து சென்ற ராணுவத்தினரை பார்த்து சுறுசுறுப்பாக சல்யூட் செய்த சிறுவன்!
சிறுவன் ராணுவத்தினரை பார்த்து சுறுசுறுப்பாக சல்யூட் (வணக்கம்) செய்தான். நேர்நிலையில் விறைப்பாக நின்று அவன் செய்த வணக்கம் ராணுவத்தினரை வெகுவாக கவர்ந்தது.
புதுடெல்லி,
லடாக்கில் இந்திய-சீனா எல்லைப்பகுதியை ராணுவத்தின் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த படையில் ஒருபிரிவினர் சமீபத்தில் லடாக்கின் சுசுல் பகுதியில் சாலை வழியாக நடந்து சென்றனர். அப்போது உள்ளூர் பகுதியை சேர்ந்த நாம்கியால் என்ற சிறுவன் ராணுவத்தினரை பார்த்து சுறுசுறுப்பாக சல்யூட் (வணக்கம்) செய்தான். நேர்நிலையில் விறைப்பாக நின்று அவன் செய்த வணக்கம் ராணுவத்தினரை வெகுவாக கவர்ந்தது.
இதை வீரர் ஒருவர் வீடியோ எடுத்ததுடன், அது இந்தோ-திபெத் படையினரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. இது நாடு முழுவதும் வைரல் ஆனது. ஊடகங்களிலும் இந்த வீடியோ குறித்த செய்தி வெளியாகி நாடு முழுவதிலும் இருந்து சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. ராஜீவ் சந்திரசேகரும் ரூ.2½ லட்சம் வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ராணுவத்தினருக்கு சிறப்பான வணக்கத்தை செலுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் மரியாதையையும் அன்பையும் நாம்கியால் பெற்றுள்ளான். அவனது தேசப்பற்றை பாராட்டும் வகையில், அவனது கனவுகளை நிறைவேற்றும் வகையில் நிதியுதவிகளை மக்கள் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நானும் ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை அவனது தந்தையின் பெயருக்கு வழங்கி உள்ளேன்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story