புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும் - ராகுல் காந்தி


புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 2 Nov 2020 6:52 AM IST (Updated: 2 Nov 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். .

ராய்ப்பூர், 

புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். .

இதுதொடர்பாக நேற்று ராய்ப்பூரில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலின் அரசு இல்லத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும். எனவே விவசாயிகள் நலன் கருதி பிரதமர் மோடி அச்சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும். கொரோனா தொற்று காரணமாக நாடு கடினமான சூழலை சந்தித்துவரும் நிலையில், சமூகத்தின் எளிய பிரிவினரான விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோர், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டில் விவசாயிகளின் நிலை அனைவருக்கும் தெரியும். விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை தினமும் படிக்கிறோம். அனைவரும் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போல அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை நடந்துவருகிறது. ஆனால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோரை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் நலனை பாதுகாக்க முடியும். 

விவசாயிகள், தொழிலாளர்களை போல, இளைஞர்களும், குழந்தைகளும்கூட நம் நாட்டின் எதிர்கால அஸ்திவாரம். அவர்களுக்கு நாம் உரிய வாய்ப்பு வழங்காவிட்டால், நாட்டின் எதிர்காலத்தை பலவீனமாக்குகிறோம் என்று அர்த்தம். நாட்டில் விவசாயிகள் தாக்கப்படுவது என்னை வேதனைப்படுத்துகிறது. விவசாய விளைபொருட்களுக்கான மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும். மண்டி, குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் முறைகளில் குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை சரிசெய்ய வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த அமைப்பையும் சிதைத்துவிட கூடாது. அவ்வாறு செய்தால், நாட்டின் அஸ்திவாரமே சேதம் அடைந்துவிடும். அதனால்தான் மூன்று புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து போராடுகிறோம். தேவைப்பட்டால், மண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.


Next Story