சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு  :  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 3 Nov 2020 2:32 PM GMT (Updated: 3 Nov 2020 2:32 PM GMT)

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மராட்டியம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தொற்று குறையத்தொடங்கியுள்ள நிலையில்,  கேரளா, மணிப்பூர், டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது.  

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 7 வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு, செப் 16 - 22 காலகட்டத்தில் 90,346 ஆக இருந்த நிலையில் அக். 28 - நவ.3 வரையிலான காலகட்டத்தில் 45,884 ஆக குறைந்தது. தினசரி கொரோனா இறப்பு, செப் 16 - 22 காலகட்டத்தில் 1,165 ஆக இருந்த நிலையில் அக். 28 - நவ.3 வரையிலான காலகட்டத்தில் 513 ஆக குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லி, கேரளா, மணிப்பூர், மாநிலங்களில் கொரோனா தொற்று  பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மணிப்பூரில் முன்னதாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  2,000- இருந்து வந்த நிலையில் இப்போது 3,500 -ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில்  26,000-ல் இருந்து 33, 000 -ஆக அதிகரித்துள்ளன. கேரளாவில் 77,000 இலிருந்து பாதிப்புகள் 86,000 ஆக அதிகரித்துள்ளன. 

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். எண்ணிக்கை அதிகரிக்காத வண்ணம் பண்டிகை காலங்களில் கவனம் தேவை. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 92%-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்பு விகிதம் 7.4 சதவிகிதமாக உள்ளது” என்றார். 

Next Story