சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய பெங்களூருவில் 6 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறப்பு - தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூருவில் சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய 6 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்படி பெங்களூரு பனசங்கரி பி.டி.ஏ. காம்ப்ளக்ஸ், கோரமங்களா பி.டி.ஏ. காம்ப்ளக்ஸ், ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படுகிறது. 5-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த முன்பதிவு மையங்கள் திறந்து இருக்கும்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்து இருக்கும்.
இதுபோல என்.ஆர்.ரோடு மஜிலிஸ்-இ-மில்லியா இஸ்லாமியா கட்டிடத்திலும், எலெக்ட்ரானிக் சிட்டி கே.எஸ்.எஸ்.ஐ.டி.சி. காம்பளக்சிலும், புட்டபர்தியில் உள்ள ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக பஸ் நிலையத்திலும் முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்படுகிறது. இங்கு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story