கர்நாடகாவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை; முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என முதல் மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 16-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்க மாநில அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வந்தது.
ஏற்கனவே, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காற்று மாசுபாட்டால், வயது முதிர்ந்த மற்றும் சிறு குழந்தைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக கூடிய ஆபத்தில் உள்ள மக்களை பாதுகாக்கும் வகையில் பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தற்காலிக தடை விதிப்பது பற்றிய தனது தீர்ப்பினை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், டெல்லியிலும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில், அதனை கவனத்தில் கொண்டு நாளை முதல் வருகிற 30ந்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க மாநில அரசு தடை விதித்தது.
இதனை பின்பற்றி கர்நாடகத்திலும் பட்டாசுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்புகளால், கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என முதல் மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். இதுபற்றிய உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story