குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது- அமித்ஷா
திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமே தகர்ந்து விட்டது. என அமித்ஷா கூறினார்.
கொல்கத்தா,
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் பங்குரா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். ஆதிவாசி மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் மதிய உணவு சாப்பிட்டார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வரர் காளி கோவிலுக்கு அமித்ஷா சென்றார். அங்குள்ள பெண் கடவுள் பவதாரிணிக்கு விசேஷ பூஜை செய்தார்.
பிரதமர் மோடி தலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவின் நலனுக்காக வேண்டிக்கொண்டதாக பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார். அதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள ஒரு அரங்கத்தில் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், அமித்ஷா கலந்து கொண்டார்.அடுத்த ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், ஆட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்களை அளித்தார்.அதற்காக மீதம் உள்ள 6 மாதங்களுக்கு பா.ஜனதாவினர் பின்பற்ற வேண்டிய 23 அம்ச வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றினோம். அதேபோன்று, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளை வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை எதிர்த்தால் மட்டும் பலன் கிடைக்காது. மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்.
தேவையான நேரத்தில் மக்களுக்கு உதவ பா.ஜனதா தொண்டர்கள் வருவார்கள் என்பதை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும். திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமே தகர்ந்து விட்டது.
பிரதமர் மோடியின் பெயரில் இந்த தேர்தலை பா.ஜனதா சந்திக்கும். சாதாரண மக்களுக்காக மத்திய அரசு தொடங்கிய திட்டங்களை நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இதற்கான நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story