“ஜோ பிடன் தலைமையில் அமைதியையும் வளர்ச்சியையும் உருவாக்கக் கூடிய ஒரு கூட்டாட்சியை இந்தியா எதிர்பார்க்கிறது” - சோனியா காந்தி
அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதன் இறுதி பெரும்பான்மை முடிவுகள் இன்று தெரிய வந்துள்ளன. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
இவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் புத்திசாலித்தனமான மற்றும் முதிர்ச்சியான தலைமையின் கீழ், உலகம் முழுவதும் அமைதியையும் வளர்ச்சியையும் உருவாக்கக் கூடிய ஒரு கூட்டாட்சியை இந்தியா எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story