தேசிய ஜனநாயக கூட்டணி வஞ்சகத்தால் வென்று விட்டது - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
ஓட்டு எண்ணிக்கை முறைகேடுகள் பற்றி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி, வஞ்சகத்தால் வெற்றி பெற்று விட்டது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி 110 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால், ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை நூலிழையில் பறிகொடுத்தது.
இந்த நிலையில், மெகா கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த தேர்தலில் நிதிஷ்குமார் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தனது மனசாட்சியை கேட்டு, பதவி ஆசையை விட்டுவிடவேண்டும்.
ஆட்சி மாற்றத்துக்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பணபலம், ஆள்பலம் மற்றும் வஞ்சகத்தால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. நாங்கள் போதிய எம்.எல்.ஏ.க்களை இழுத்து, ஆட்சியை பிடிப்பது பற்றி ஓட்டுப்போட்ட மக்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
மெகா கூட்டணியை விட வெறும் 12 ஆயிரத்து 270 ஓட்டுகள்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமாக பெற்றுள்ளது. அதை வைத்து எப்படி எங்களை விட 15 தொகுதிகள் அதிகமாக வெற்றிபெற முடியும்?
ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடந்திருந்தால், நாங்கள் 130 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். இந்த முறைகேடுகள் பற்றி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதுவோம்.
மேலும், பல தொகுதிகளில், தபால் ஓட்டுகளை முதலில் எண்ணுவதற்கு பதிலாக, கடைசியில் எண்ணினார்கள். பல தொகுதிகளில் 900 தபால் ஓட்டுகள்வரை செல்லாது என்று அறிவித்தார்கள். அவையெல்லாம் எங்களுக்கு ஆதரவான ராணுவ வீரர்களின் ஓட்டுகள்.
எனவேதான், இதுபோன்ற தொகுதிகளில் தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும், அதை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். தேர்தல் கமிஷன் திருப்திகரமாக பதில் அளிக்காவிட்டால், கோர்ட்டுக்கு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story