டெல்லியில் பாதுகாப்பு அளவை விட 8 மடங்கு அதிகரித்த காற்று மாசு


டெல்லியில் பாதுகாப்பு அளவை விட 8 மடங்கு அதிகரித்த காற்று மாசு
x
தினத்தந்தி 15 Nov 2020 9:37 PM GMT (Updated: 15 Nov 2020 9:37 PM GMT)

டெல்லியில் காற்று மாசு பாதுகாப்பு அளவை விட சில இடங்களில் 8 மடங்கு அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து திடீரென அதிகரிக்க தொடங்கியது.  இதன் தொடர்ச்சியாக, கடந்த 13ந்தேதி பலி எண்ணிக்கையும் 100-ஐ கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.  நாட்டின் கொரோனா வைரசின் தலைநகராக டெல்லி உருமாற கூடும் என டெல்லி உயர் நீதிமன்றம் கூட சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் பண்டிகை காலத்தில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.  டெல்லியில் கொரோனா பாதிப்பு ஒருபுறம், காற்று மாசு மறுபுறம் என மக்களை துன்புறுத்தி கொண்டிருக்க, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தீபாவளியன்று மண் விளக்குகளை ஏற்றவும், பட்டாசுகளை தவிர்க்கவும் அரசு கேட்டு கொண்டது.

இந்நிலையில், டெல்லியில் வருகிற 30ந்தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டது.  எனினும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியின் ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய புகார் வந்த நிலையில், டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.  விதிமீறலில் ஈடுபட்ட 850 பேர் கைது செய்யப்பட்டனர்.  பட்டாசுகளை விற்ற, வெடித்த 1,200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோன்ற 1,314 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  டெல்லியில் ஒட்டுமொத்த காற்று மாசு அளவு அதிகரித்து நகரம் மோசமடைந்து உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.  இந்திய தர நிர்ணயத்தின்படி பாதுகாப்பு அளவை விட காற்று மாசு சில இடங்களில் 8 மடங்கு அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளது.

Next Story