பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த 15 வயது சிறுமி எரித்துக் கொலை


பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த 15 வயது சிறுமி எரித்துக் கொலை
x
தினத்தந்தி 18 Nov 2020 11:15 AM GMT (Updated: 18 Nov 2020 11:38 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த 15 வயது சிறுமி குற்றவாளியின் உறவினர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி  15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது அந்த சிறுமியின் பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், அதே ஊரில் பழத்தோட்டத்தின் பராமரிப்பாளராக வேலை செய்து வந்த ஹரீஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினர்கள், வழக்கை திரும்ப பெறுமாறு புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை ஹரீஷின் உறவினர்கள் 5 பேர், அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர். இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் கொண்டு வந்த பெட்ரோலை அந்த சிறுமியின் மீதி ஊற்றி கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது பெற்றோர் வீட்டில் இல்லாததால், அருகில் இருந்தவர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். உடலில் 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும் இறப்பதற்கு முன்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில் சஞ்சய் என்ற நபரை சுட்டிக்காட்டியுள்ளார். 

வழக்கை திரும்ப பெறாததால் தனது மகளை எரித்து கொலை செய்தவர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story